விளையாட்டு
ரிஷப் பண்ட் அவுட்டான காட்சி

ரோகித் சர்மா, விராட் கோலி ஏமாற்றம் - 6 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்

Published On 2022-03-12 17:06 IST   |   Update On 2022-03-12 17:24:00 IST
இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் ரன் அவுட் முறையில் வெளியேறினார்.
பெங்களூர்:

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கி விளையாடினர். 2-வது ஓவர் பெர்னாண்டோ வீசினார். அந்த ஓவரில் 4-வது பந்தில் மயங்க் அகர்வாலுக்கு எல்பிடபிள்யூ அப்பீல் கேட்க்கப்பட்டது. அதற்கு அம்பயர் அவுட் இல்லை என தெரிவித்தார். அதற்குள் மயங்க் அகர்வால் 1 ரன்னுக்கு முயற்சிக்கும் போது ரன் அவுட் ஆனார். கடைசியில் அந்த பந்து நடுவரால் நோ பால் என அறிவிக்கப்பட்டது. 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்து அகர்வால் வெளியேறினார்.

இதனையடுத்து ரோகித் சர்மாவுடன் விஹாரி ஜோடி சேர்ந்து ஆடினார். பொறுமையுடன் இருவரும் ஆடி ரன்களை சேர்த்தனர். இலங்கை அணியின் இடது கை பந்து வீச்சாளர் எம்புல்தெனிய பந்து வீச அழைக்கப்பட்டார். அவரது 2-வது ஓவரிலேயே இந்திய கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்டை அவர் கைப்பற்றினார். இதனால் இந்திய அணி 29 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். ரசிகர்களின் ஆரவாரத்தோடு அவர் ஆடுகளத்திற்க்குள் அடியெடுத்து வைத்தார். 
2 வருங்களாக சதம் அடிக்கவில்லை என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர். 

விராட் கோலியும் விஹாரியும் இலங்கை அணியின் பந்து வீச்சை சிறப்பாக சமாளித்து ஆடினர். குறிப்பாக விஹாரி சுழற்பந்து வீச்சாளரின் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். இந்நிலையில் 26 ஓவரில் விஹாரி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 81 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரிலேயே விராட் கோலியும் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். பந்து மிகவும் தாழ்ந்து வந்ததால் அவரால் சரியாக கணித்து ஆடமுடியாமல் அவுட் ஆனார். இதனால் விராட் கோலி சிறிது நேரம் களத்தில் சோகமாக காணப்பட்டார். அவர் 48 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார்.



அதன் பின்னர் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவர் 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து போல்ட் முறையில் வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 



இந்திய அணி தற்போது வரை 37 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் 21 ரன்னிலும் அஸ்வின் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

Similar News