விளையாட்டு
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் - ஜூலன் கோஸ்வாமி சாதனை
மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி சாதனை படைத்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் 39 வயதான கோஸ்வாமி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீராங்கனை என்ற சாதனையை கோஸ்வாமி படைத்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீராங்கனைகள் பட்டியலில் ஆஸ்திரேலியா வீராங்கனை புல்ஸ்டனை (39 விக்கெட்) பின்னுக்கு தள்ளி கோஸ்வாமி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைபற்றிய டாப் 5 வீராங்கனைகள் விவரம்:-
முதல் இடத்தில் இந்தியாவை சேர்ந்த கோஸ்வாமி (40 விக்கெட்), இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஃபுல்ஸ்டன் (39 விக்கெட்), மூன்றாம் இடத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த ஹோட்ஜ் (37 விக்கெட்), 4-வது இடத்தில் இங்கிலாந்து அணியை சேர்ந்த டெய்லர் (36 விக்கெட்), 5-வது இடத்தில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் (33 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.