விளையாட்டு
கிராலே, ஜோ ரூட் அபாரம் - நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து 217/1
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் இங்கிலாந்தின் ஜாக் கிராலே சதமடித்து அசத்தினார்.
ஆன்டிகுவா:
வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 311 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோவ் 109 ரன் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீசின் ஜேடன் சீல்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கீமர் ரோச் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 375 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பானர் 123 ரன்னும், பிராத்வெயிட் 55 ரன்னும், ஹோல்டர் 45 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், லீச், ஓவர்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 64 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 6 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஜோ ரூட், ஜாக் கிராலேவுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களால் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. பொறுப்புடன் ஆடிய கிராலே சதமடித்தார். ஜோ ரூட் அரை சதமடித்தார்.
ஆட்டத்தின் பிற்பாதியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டடது.
இறுதியில், நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்துள்ளது. கிராலே 117 ரன்னுடனும், ஜோ ரூட் 84 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீசை விட இங்கிலாந்து இதுவரை 153 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.