விளையாட்டு
கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி

Published On 2022-03-11 13:47 IST   |   Update On 2022-03-11 13:47:00 IST
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
மவுண்ட் மவுங்கானு:

12-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலகக்கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் “ரவுண்டு ராபின்” முறையில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப் படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

நேற்றுடன் 8 ஆட்டங்கள் முடிந்தன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 4 புள்ளிகளும், இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் தலா 2 புள்ளிகளும் பெற்றுள்ளன.இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் புள்ளி எதுவும் பெறவில்லை.

9-வது லீக் ஆட்டம் மவுண்ட் மவுங்கானுவில் இன்று நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன் எடுத்தது. தொடக்க வீராங்கனை லவ்ரா 75 ரன்னும், கேப்டன் சுனேலுஸ் 62 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் பாத்திமா சனா, குலாம் பாத்திமா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், டயானா பெய்க், நஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

224 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. முதல் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து  இழந்தாலும் சொஹைல்-நிதா தர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதத்தை கடந்து வெளியேறினார். 

இதனையடுத்து அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் இஸ்மாயில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Similar News