விளையாட்டு
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சரல் எர்வீ சதம்- முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 238 ரன்கள் சேர்ப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் சேர்த்துள்ளது.
கிறிஸ்ட்சர்ச்:
தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 276 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இந்திய நேரடிப்படி இன்று அதிகாலை தொடங்கியது. டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக கேப்டன் டீன்எல்கர், சரல் எர்வீ களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்தனர்.
டீன்எல்கர் 41 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் மார்க்ராம் களம் வந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரல் எர்வீ தனது முதல் சதத்தை அடித்தார்.
தேனீர் இடைவெளியின் போது தென்ஆப்பிரிக்கா 58 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்திருந்தது. சரல் எர்வீ 100 ரன்னுடனும், மார்க்ராம் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இடைவெளி முடிந்து மீண்டும் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி சிறிது நேரத்தில் ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது. சிறப்பாக ஆடி சதம் அடித்த சரல் எர்வீ, மட் ஹென்றி ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தாக ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் களமிறங்கினார். இந்த ஜோடி மிகவும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 103 பந்துகளை சந்தித்த மார்க்ராம் 42 இருந்த நிலையில் கேட்ச் முறையில் அவுட் ஆனார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்தது.