விளையாட்டு
ருத்ர தாண்டவம் ஆடிய இஷான் கிஷன்... இலங்கையின் வெற்றிக்கு 200 ரன்கள் இலக்கு
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களை திணறடித்த இஷான் கிஷன், 56 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 89 ரன்கள் குவித்தார்.
லக்னோ:
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், முதல் 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோர் மீண்டும் இடம்பிடித்தனர். துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் களமிறங்கி அதிரயாக ஆடி ரன் குவித்தனர். இஷான் கிஷன் பவுண்டரி, சிக்சர்களாக விளாசி 30 பந்துகளில் அரை சதம் கடந்ததுடன் சதத்தை நோக்கி பயணித்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறினர்.
111 ரன்கள் குவித்த நிலையில் துவக்க ஜோடியை பிரித்தார் லகிரு குமார. இவரது பந்துவீச்சில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். ரோகித் மொத்தம் 32 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 44 ரன்கள் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து இஷானுடன் இணைந்த ஸ்ரேயாஸ் அய்யரும் அதிரடியில் மிரட்ட, இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இதற்கிடையே இஷான் கிஷன் விக்கெட்டை தசுன் சனகா கைப்பற்றினார். இஷான் கிஷன் 56 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 89 ரன்கள் குவித்தார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும், ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 3 ரன்களும் எடுக்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இலங்கை களமிறங்குகிறது.