விளையாட்டு
இந்திய அணி வீரர்கள்

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? நாளை முதல் டி20 போட்டி

Published On 2022-02-23 10:37 IST   |   Update On 2022-02-23 10:37:00 IST
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ:

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நாளை (24-ந் தேதி) நடக்கிறது.

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். அதே திறமையை இலங்கைக்கு எதிரான தொடரிலும் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த தொடரில் விளையாடாத வேகப்பந்து வீரர் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இதேபோல காயத்தில் இருந்து குணமடைந்த ரவீந்திர ஜடேஜாவும் அணிக்கு திரும்பியுள்ளார். அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான சஞ்சு சாம்சனும் இந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக தீபக் சாஹர் விலகியுள்ளார். முன்னாள் கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் ரி‌ஷப்பண்ட் ஆகியோருக்கு 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர், இஷான் கி‌ஷன், ஹர்‌ஷல் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோர் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடியது. 5 போட்டிக்கொண்ட தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்தது.

அந்த அணி இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாட முயற்சிக்கும். அதே நேரத்தில் இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது இலங்கை அணிக்கு கடும் சவாலானதே.

இரு அணிகளும் நாளை மோதுவது 23-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 22 ஆட்டத்தில் இந்தியா 14-ல், இலங்கை 7-ல் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் முடிவில்லை.

இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த 20 ஓவர் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

நாளைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலி வி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), பும்ரா (துணை கேப்டன்), இஷான் கி‌ஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அவேஸ்கான், புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், ஹர்‌ஷல் படேல்.

இலங்கை: தசுன் ‌ஷனகா (கேப்டன்), குஷால் மெண்டிஸ், பதும் நி‌ஷன்கா, அஸ்லங்கா, சண்டிமால், குணதிலகா, கமில் மிஸ்ரா, லியானகே, ஹசரங்கா, கருணாரத்னே, சமீரா, லஹிருகுமாரா, பினுரா பெர்ணான்டோ, ஷிரன் பெர்ணான்டோ, மகீஷ் தீக்சனா, வாண்டர்சே, ஜெயவிக்ரமா, அஷின் டேனியல்.

Similar News