விளையாட்டு
டெம்பா பவுமா - டுசன்

டெம்பா பவுமா, டுசன் அதிரடி சதம்- இந்தியாவுக்கு 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

Published On 2022-01-19 12:32 GMT   |   Update On 2022-01-19 12:32 GMT
கேப்டன் டெம்பா பவுமா- ராசி வான் டெர் டுசன் ஜோடி நங்கூரம் போன்று நிலைத்து நின்று இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
பார்ல்:

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தென் ஆப்பிரிக்காவின் பார்ல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

காயம் காரணமாக ரோகித் சர்மா இடம்பெறாததால் அவருக்கு பதில் கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பும்ரா துணை கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். வெங்கடேஷ் ஐயர் அறிமுக வீரராக இன்றைய போட்டியில் களமிறங்கினார். 



தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர்கள் மலன் 6 ரன்களிலும், குயின்டன் டி காக் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மார்க்ராம் 4 ரன்கள் மட்டுமே சேர்த்து ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஆனால், கேப்டன் டெம்பா பவுமா- ராசி வான் டெர் டுசன் ஜோடி நங்கூரம் போன்று நிலைத்து நின்று இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. டெம்பா பவுமா 110 ரன்கள் சேர்த்தார். ராசி வான் டெர் டுசன் 129 ரன்களுடனும், டேவிட் மில்லர் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளும், அஷ்வின் 1 விக்கெட்டும்  வீழ்த்தினர். 

இதையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
Tags:    

Similar News