விளையாட்டு
விராட் கோலி, ரஷித் லத்திப்

விராட் கோலி பதவி விலகுவதற்காக ரோகித், ராகுல் காத்திருந்தனர்- முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் குற்றச்சாட்டு

Published On 2022-01-18 10:06 GMT   |   Update On 2022-01-18 12:36 GMT
விராட் கோலி மீண்டும் ரன்கள் அடிக்க தொடங்கும்போது அவரை சீண்டியவர்களுக்கு பதிலடியாக அமையும் என ரஷித் லத்திப் கூறினார்.
இஸ்லாமாபாத்:

இந்திய வீரர் விராட் கோலி கடந்த 15-ம் தேதி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பிசிசிஐ- விராட் கோலிக்கு இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. 

இதை தொடர்ந்து இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், அஸ்வின், பும்ரா உள்ளிட்ட பல வீரர்கள் விராட் கோலியின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், இருப்பினும் அவரது முடிவை மதிப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் கோலியின் பதவி விலகளுக்காக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் காத்திருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்திப் குற்றம்சாட்டியுள்ளார்.



இதுகுறித்து அவர் கூறியதாவது:-

விராட் கோலி ஒரு சர்வதேச நட்சத்திரம். அவர் பதவி விலகிவிட்டார். இதையடுத்து இந்தியாவின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி வருகிறது.

ரோகித் சர்மா கேப்டனாக இருப்பதற்கு உடல் தகுதி இல்லாதவர். அவர் முழு தென் ஆப்ரிக்கா தொடரிலும் பங்கேற்கவில்லை. கே.எல்.ராகுலுக்கு அந்த திறமை கிடையாது. கோலி பதவி விலகுவதாக அறிவித்தவுடன், அனைத்து வீரர்களுடைய எதிர்வினைகளையும் பார்த்தேன். 

ராகுல், ரோகித் சர்மா கோலி விலகுவதற்காக காத்திருந்தது போல தெரிகிறது. கோலி, கங்குலி, பிசிசிஐக்கு இடையே என்ன பிரச்சனை என்று தெரியாது. ஆனால் அந்த பிரச்சனை ஏற்பட்டிருக்க கூடாது. நீங்கள் என்ன பிரச்சனையை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள். விராட் கோலியை விட பெரிய வீரர் உலகத்தில் கிடையாது. அவர் மீண்டும் ரன்கள் அடிக்க தொடங்கும்போது அவரை சீண்டியவர்களுக்கு பதிலடியாக அமையும். உலகில் இருப்பது ஒரே ஒரு விராட் கோலி தான்.

இவ்வாறு ரஷித் லத்திப் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News