விளையாட்டு
ராகுல் டிராவிட்

ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரிக்கு அணியில் இடம் உண்டா? டிராவிட் விளக்கம்

Published On 2022-01-09 00:42 GMT   |   Update On 2022-01-09 00:42 GMT
இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 3-வது டெஸ்டில் ஆடும் லெவனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

இதற்கிடையே, இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 11-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான புஜாரா, ரஹானே ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுக்கு மேலாக ரன்கள் எடுக்க முடியாமல் திணறிவருகின்றனர். அவர்களது திறமையின் மீதான நம்பிக்கை, கடந்த காலங்களில் அவர்கள் அணிக்கு அளித்த பங்களிப்பு காரணமாக இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டின் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடிவருகின்றனர். 

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியதாவது:

இரண்டாவது டெஸ்டில் ஹனுமா விஹாரி நன்றாக பேட்டிங் செய்துள்ளார். 2 இன்னிங்சிலும் அவர் மிகச்சிறப்பாக ஆடினார். ஷ்ரேயாஸ் அய்யர் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். இருவரும் கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி விளையாடி உள்ளனர்.

ஆனாலும், அணியில் மூத்த வீரர்கள் இருக்கும்போது இளம் வீரர்கள் அவர்களுக்கான வாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும். அதுவரை கிடைக்கும் வாய்ப்பில் பெரியளவு ரன்களை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News