விளையாட்டு
ஷர்துல் தாகூர்

பந்துவீச்சில் இன்னும் சிறப்பான நிலையை அடையவில்லை ‌- ஷர்துல் தாகூர்

Published On 2022-01-05 10:22 IST   |   Update On 2022-01-05 10:22:00 IST
பும்ரா, முகமது சமி தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுத்தார்கள். அது எனக்கு விக்கெட்டாக அமைந்தது என ஷர்துல் தாகூர் கூறியுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க்:

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முதல் இன்னிங்சில் 202 ரன்னில் சுருண்டது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 229 ரன் எடுத்தது. பீட்டர்சன் அதிக பட்சமாக 62 ரன்னும், பவுமா 51 ரன்னும் எடுத்தனர். ‌ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டும், முகமது ‌ஷமி 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்திருந்தது. கேப்டன் லோகேஷ் ராகுல் 8 ரன்னும், மயங்க் அகர்வால் 23 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். புஜாரா 35 ரன்னிலும், ரகானே 11 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி தற்போது 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கைவசம் 8 விக்கெட் உள்ளது. இதனால் இந்த டெஸ்ட்டில் இரு அணிகளுக்கும் சமமான நிலையில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

‌ஷர்துல் தாகூர் 61 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய இந்திய பவுலர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2015-ம் ஆண்டு நாக்பூர் டெஸ்டில் அஸ்வின் 66 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது சாதனையாக இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் ஹர்பஜன் சிங் 2011-ம் ஆண்டு கேப்டவுன் டெஸ்டில் 120 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், தென் ஆப்பிரிக்க மண்ணிலும் சிறப்பாக பந்துவீசிய இந்திய பவுலர் என்ற சாதனையை ‌ஷர்துல் தாகூர் படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் தென் ஆப்பிரிக்க மண்ணில் சிறப்பாக பந்துவீசிய 2-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ‌ஷர்துல் தாகூர் பெற்றார். 1999-2000-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஆண்டி காட்டிக் 46 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகும்.

அதற்கு அடுத்தபடியாக மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹோக்கர்ட் 2004-05-ம் ஆண்டில் ஜோகன்னஸ் பர்க்சில் 61 ரன் கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். ‌ஷர்துல் தாகூரும் அவரை போன்றே பந்துவீசி அவருடன் இணைந்து இருக்கிறார்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 7 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தாலும் பந்துவீச்சில் தான் இன்னும் சிறப்பான நிலையை அடையவில்லை என்று ‌ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இது எனது சிறந்த பந்துவீச்சுதான். ஆனாலும் நான் இன்னும் சிறந்த நிலையை அடையவில்லை. முகமது ‌ஷமி மற்றும் பும்ரா அணியின் முன்னணி பவுலர்கள் ஆவார்கள். நன்றாக பந்துவீசினார்கள். ஆனால் அதிர்ஷ்டம் அமையவில்லை. அவர்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுத்தார்கள். அது எனக்கு விக்கெட்டாக அமைந்தது.

டெஸ்டில் விளையாட நான் தொடர்ந்து விரும்புகிறேன். தேர்வு குழுவினரும், அணி நிர்வாகமும் என்மீது நம்பிக்கை வைத்தது. இந்தியா போன்ற நாடுகளில் அணியில் இடம்பெறுவது மிகவும் கடினமானது. இதற்கு அதிகளவில் போட்டி இருக்கிறது.

புஜாரா தற்போது நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறார்.

இவ்வாறு ‌ஷர்துல் தாகூர் கூறினார்.

Similar News