விளையாட்டு
அஜாஸ் பட்டேல்

வான்கடே டெஸ்ட் கிரிக்கெட்- 10 விக்கெட்களை வீழ்த்தி நியூசிலாந்து வீரர் புதிய சாதனை

Published On 2021-12-04 08:46 GMT   |   Update On 2021-12-04 12:58 GMT
நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 ஓவர்கள் வீசி இந்திய அணியின் 10 விக்கெட்களையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். 

புஜாரா, கேப்டன் விராட் கோலி டக்அவுட்டில் வெளியேறிய நிலையில்  இந்திய அணி 90 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர்  மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்திருந்தது. மயங்க் 120 ரன்களுடனும், சகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாளான இன்று காலை மேலும் 2 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சகா ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ரவிச்சந்திரன் அஷ்வின் ரன் எதுவும் எடுக்காமல் அஜாஸ் படேல் பந்துவீச்சிற்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.  பின்னர் வந்த அக்ஸர் படேல், மயங்க் அகர்வால் உடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். 

அரைசதம் அடித்த அக்ஸர் மேலும் 2 ரன்களை சேர்த்தநிலையில் ஆட்டமிழந்தார். எனினும்  தொடர்ந்து விளையாடிய  மயங்க் அகர்வால் 150 ரன்களை குவித்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மயங்க் அடித்த 150 ரன்களில் 17 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களும் அடங்கும். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுடன் வெளியேற இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 325 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. 

இந்தப் போட்டியில் மும்பையை பூர்வீகமாக கொண்ட நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 ஓவர்கள் வீசி இந்திய அணியின் 10 விக்கெட்களையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.  

இதற்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வீரர்கள் மட்டுமே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் என்ற சாதனையை படைத்திருந்தனர். 

அதன்படி, 1956-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லெகர் 53 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை முதல் முறையாக படைத்தார். 

ஜிம் லெகருக்கு அடுத்தபடியாக 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே 76 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

தற்போது, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஜிம் லேகர், அனில் கும்ளே இடம்பெற்றுள்ள சாதனை பட்டியலில் 3-வது நபராக நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் இணைந்துள்ளார். 
Tags:    

Similar News