விளையாட்டு
மயங்க் அகர்வால்

வான்கடே டெஸ்டில் சதம் விளாசிய மயங்க் அகர்வால்: முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 221/4

Published On 2021-12-03 12:11 GMT   |   Update On 2021-12-03 12:11 GMT
புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. மைதானத்தில் பவுண்டரி கோடு அருகே ஈரப்பதம் காணப்பட்டதால் போட்டி 9.30 மணிக்குப் பதில் 11.30 மணிக்கு தொடங்கியது.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். ரகானே, ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷுப்மான் கில் 44 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த புஜாரா, விராட் கோலி கோலி டக்அவுட்டில் வெளியேறினர். இதனால் இந்திய அணி 90 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 119 பந்தில் அரைசதம் அடித்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னில் வெளியேறினார். இருந்தாலும் இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. 5-வது விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால் உடன் சகா ஜோடி சேர்ந்தார்.

மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 196 பந்தில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். முதல் டெஸ்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் சதம் விளாசி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதற்கிடையே இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் அடித்துள்ளது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சகா 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
Tags:    

Similar News