விளையாட்டு
பி.வி.சிந்து

உலக டூர் பைனல்ஸ்- கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்த பி.வி.சிந்து

Published On 2021-12-03 11:54 GMT   |   Update On 2021-12-03 11:54 GMT
இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, இன்றைய ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்.
பாலி:

இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

இந்நிலையில், இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை போன்பவி சோச்சுவாங்கை பி.வி. சிந்து எதிர்கொண்டார். இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து, இன்றைய ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். 

ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், பி.வி.சிந்து 12-21 21-19 14-21 என தோல்வியடைந்தார். 2016 உலக ஜூனியர் சாம்பியனான சோச்சுவாங்குடன் பி.வி.சிந்து இதுவரை ஏழு முறை விளையாடி உள்ளார். இதில், மூன்று முறை சிந்து தோல்வி அடைந்துள்ளார். 

இதன்மூலம், குரூப்-ஏ பிரிவில் சிந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். சோச்சுவாங் முதலிடத்தில் உள்ளார். இதேபோல் குரூப்-பி பிரிவில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி, கொரிய வீராங்கனை ஆன் சே யங் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர். அரையிறுதியில் பி.வி.சிந்து யாருடன் மோத உள்ளார் என்பது பின்னர் தேர்வு செய்யப்படும்.

முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், தனது கடைசி லீக் ஆட்டத்தில் மலேசிய வீரர் லீ ஜி ஜியாவிடம் தோல்வியடைந்தார். 
Tags:    

Similar News