செய்திகள்
அபய் சர்மா

இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் சர்மா விண்ணப்பம்

Published On 2021-10-21 07:13 GMT   |   Update On 2021-10-21 07:13 GMT
ராகுல் டிராவிட்டுக்கு இதுவரை யாரும் பெறாத வகையில் இந்திய பயிற்சியாளர் பதவிக்கு ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி உள்ளார். 20 ஓவர் உலக கோப்பையுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது. அவர் மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை.

முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார். உலக கோப்பை போட்டிக்கு பிறகு அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார்.

ராகுல் டிராவிட்டுக்கு இதுவரை யாரும் பெறாத வகையில் பயிற்சியாளர் பதவிக்கு ரூ.10 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. இதேபோல பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த பரத் அருணுக்கு பதிலாக மாம்ரே புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார்.

இதற்கிடையே பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வரவேற்று இருந்தது. இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு அபய் சர்மா விண்ணப்பித்து உள்ளார். அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் இருந்தார். அவரது பதவிக்கு அபய் சர்மா விருப்பம் தெரிவித்து உள்ளார்.

52 வயதான அபய் இந்திய ‘ஏ’ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பொறுப்பு வகித்து உள்ளார். தேசிய பெண்கள் அணிக்கும் அவரது பங்களிப்பு இருந்துள்ளது.

பயிற்சியாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 3-ந்தேதி ஆகும்.

Tags:    

Similar News