செய்திகள்
இந்திய அணி

இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

Published On 2021-10-17 02:51 GMT   |   Update On 2021-10-17 02:51 GMT
உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
துபாய்:

இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வென்றிருந்தது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமிருந்ததாலும், 3-வது அலை வரலாம் என்ற பேச்சு கிளம்பியதாலும் இந்த போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கடந்த ஜூன் மாதம் மாற்றி அறிவிக்கப்பட்டது.

இதன்படி 16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதில் ஓமனில் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடக்கிறது. மற்ற அனைத்து ஆட்டங்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் கால்பதிக்கும் நிலையில், தொடக்கத்தில் முதல் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன.

முதல் சுற்றில் பங்கேற்கும் 8 அணிகளில் ‘ஏ’ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, ‘பி’ பிரிவில் வங்காளதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதிய பிறகு, இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 12 சுற்றில் ஏற்கனவே குரூப்-1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு முதல் சுற்று அணிகள், குரூப்-2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இரண்டு முதல் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு நுழையும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை வருகிற 24-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

இந்த கொரோனா காலத்தில் நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் இங்கு தான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்திருப்பதால் இங்குள்ள சீதோஷ்ண நிலைமையும், மைதானத்தின் தன்மையும் பெரும்பாலான வீரர்களுக்கு இப்போது அத்துப்படி. ஆக, ஐ.பி.எல். அனுபவம் நிச்சயம் அவர்களுக்கு அனுகூலமாக அமையும்.

2007-ம் ஆண்டு டோனி தலைமையில் உலக கோப்பைக்கு முத்தமிட்ட இந்திய அணி இந்த முறை விராட் கோலி தலைமையில் படையெடுத்துள்ளது. டோனி ஓய்வு பெற்று விட்டாலும் அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கோலி, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார், இஷான் கிஷன் என்று பேட்டிங் வரிசையில் அதிரடிக்கு குறைவில்லாத வீரர்கள் உள்ளனர். இதே போல் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாக்குர், ஜடேஜா, அஸ்வின், வருண் சக்ரவர்த்தி என்று தரமான பந்து வீச்சாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள். ஒருங்கிணைந்து திறமையை வெளிப்படுத்தினால் 2-வது முறையாக கோப்பையை கையில் ஏந்தலாம். இன்னும் தனது கேப்டன்ஷிப்பில் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாமல் தவிக்கும் விராட் கோலிக்கு அந்த ஏக்கத்தை தணிக்க இது அருமையான சந்தர்ப்பமாகும். இந்த உலககோப்பையுடன் அவர் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுவது நினைவு கூரத்தக்கது.

ஆனால் இந்தியாவுக்கு, ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து, நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கடும் சவாலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. 20 ஓவர் கிரிக்கெட்டில் எப்போதும் சரவெடியாய் வெடிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட், கிறிஸ் கெய்ல், வெய்ன் பிராவோ, இவின் லீவிஸ், ஆந்த்ரே ரஸ்செல், ஹெட்மயர், பூரன் என்று நட்சத்திர வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது அசுர பலமாகும். இதே போல் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாவிட்டாலும் அவர்களும் அபாயகரமான அணி தான். அதனால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

20 ஓவர் கிரிக்கெட் என்றாலே ரன்வேட்டையைத் தான் ரசிகர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), ஜோஸ் பட்லர், பேர்ஸ்டோ, ஜாசன் ராய் , லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து), விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா (இந்தியா), பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்), டிவான் கான்வே, கப்தில் (நியூசிலாந்து) , குயின்டான் டி காக் (தென்ஆப்பிரிக்கா), கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) உள்ளிட்டோர் இந்த உலக கோப்பையில் கவனிக்கத்தக்க வீரர்களாக வலம் வருகின்றனர். முன்னணி அணிகள் போட்டிக்கு முன்பாக தங்களை மேலும் பட்டை தீட்டிக் கொள்ள சில பயிற்சி ஆட்டங்களிலும் விளையாட உள்ளன.

உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

முதல் நாளான இன்று மஸ்கட்டில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஓமன்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேச அணி, கைல் கோட்ஸிர் தலைமையிலான ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது. போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

Similar News