செய்திகள்
புள்ளிகள் பட்டியல்: ஹாட்ரிக் தோல்வி மூலம் 7-வது இடத்திற்கு பின்தங்கிய மும்பை இந்தியன்ஸ்
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் 2-வது பகுதி தொடரில் இதுவரை வெற்றியை ருசிக்கவில்லை.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். ஐ.பி.எல். 2021 சீசனில் முதல் பாதி தொடரில் மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்தது.
கடந்த 19-ந்தேதி முதல் 2-வது பகுதி ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான 2-வது போட்டியிலும், நேற்று நடைபெற்ற ஆர்.சி.பி. அணிக்கெதிரான 3-வது போட்டியிலும் தொடர்ந்து தோல்வியை தழுவியது.
இதன்காரணமாக 10 போட்டிகளில் நான்கு வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்திற்கு சரிந்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றதன் மூலம் 10 ஆட்டங்களில் நான்கில் வெற்றிபெற்று 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா நான்கு வெற்றிகள் பெற்றுள்ளன. இதனால் மும்பை இந்தியன்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேற கடுமையாக போராட வேண்டும்.