செய்திகள்
விராட் கோலி

முதல் டெஸ்டில் 2 புள்ளிகள் குறைக்கப்பட்டு இருப்பது சரியான முடிவு அல்ல - விராட் கோலி

Published On 2021-08-12 08:55 GMT   |   Update On 2021-08-12 08:55 GMT
இரண்டாவது டெஸ்டில் ஷர்துல் தாகூர்க்கு பதிலாக அஸ்வின் இடம் பெறுவாரா? அல்லது 4-வது வேகப்பந்து வீரர் என்ற முறையில் இஷாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

லார்ட்ஸ்:

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணி இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்த டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் மழையால் அது பறிபோனது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்த டெஸ்டில் காயம் காரணமாக வேகப்பந்து வீரர் ‌ஷர்துல் தாகூர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

சுழற்பந்து ஆல் ரவுண்டரான அஸ்வின் இடம் பெறுவாரா? அல்லது 4-வது வேகப்பந்து வீரர் என்ற முறையில் இஷாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.

இதுதொடர்பாக அணியின் கேப்டன் விராட் கோலியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

‌ஷர்துல தாகூர் இடத்தில் யார் இடம் பெறுவார் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. சில ரன்களை எடுப்பதை விட 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான் அணிக்கு முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

அணியின் பேட்டிங் வரிசை நன்றாக இருக்கிறது. ராகுல், ரோகித்சர்மா, ஜடேஜா நன்றாக விளையாடுகிறார்கள். நான், புஜாரா, ரகானே ஆகியோர் சரியாக ஆடவில்லை. கடைசி நேர ஆட்டக்காரர்களும் நன்றாக ஆடினார்கள்.

அணி தேர்வு சமநிலையில் இருக்க வேண்டும் என்பது முக்கியமாகும். முதல் டெஸ்டில் சிறப்பான நிலையில் இருந்தது போல் இந்த டெஸ்டிலும் அதே மாதிரியான நிலைமை தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

புஜாரா, ரகானேவின் பேட்டிங் குறித்து நான் எந்த விதமான கவலையும் படவில்லை. அவர்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார்கள்.

முதல் டெஸ்டில் மெதுவாக பந்து வீசியதற்காக 2 புள்ளிகள் குறைக்கப்பட்டு இருப்பது சரியான முடிவு அல்ல. இது அதிருப்தி அளிக்கிறது. புள்ளிகள் என்பது மிக மிக முக்கியமானதாகும்.

இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார். 

Tags:    

Similar News