செய்திகள்
கோப்பை வென்ற வங்காளதேச அணி

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட வங்காளதேசம் - டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தல்

Published On 2021-08-09 20:36 GMT   |   Update On 2021-08-09 20:36 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 9 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார்.
டாக்கா:

ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முன்னதாக நடைபெற்ற நான்கு போட்டிகளில் வங்காளதேசம் மூன்றிலும், ஆஸ்திரேலியா ஒன்றிலும் வென்றுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.

டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நயீம் 23  ரன் எடுத்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் நாதன் எல்லிஸ், கிறிஸ்டியன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் சிக்கி விரைவில் ஆல் அவுட்டானது.



ஆஸ்திரேலிய அணி 13.4 ஓவரில் 62 ரன்னில் பரிதாபமாக சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் வேட் 22 ரன்கள் எடுத்தார். இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

வங்காளதேசம் சார்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும், மொகமது சைபுதின் 3 விக்கெட்டும், நசும் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்காளதேசம் 4-1 என கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஷகிப் அல் ஹசன் கைப்பற்றினார்.
Tags:    

Similar News