செய்திகள்
மணிபாரதி

டிஎன்பிஎல் கிரிக்கெட்- திருப்பூர் அணியை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்

Published On 2021-08-07 21:17 IST   |   Update On 2021-08-07 21:17:00 IST
அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 57 ரன்கள் விளாசிய விவேக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 25வது ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மான் பப்னா 52 ரன்கள் எடுத்தார். சித்தார்த் 36 ரன்கள் சேர்த்தா.

திண்டுக்கல் தரப்பில்  ரங்கராஜ் சுதேஷ் 2 விக்கெட்டுகளும், விக்னேஷ், குர்ஜாப்னீத் சிங், எம்.சிலம்பரசன், விவேக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 146 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் சுரேஷ் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் கேப்டன் ஹரி நிசாந்த்- மணி பாரதி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தனர். ஹரி நிஷாந்த் 33 ரன்களும், மணி பாரதி 24 ரன்களும் எடுத்தனர். சீனிவாசன் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 65 ரன்கள்.

அதன்பின்னர் ஹரிஹரன்-விவேக் ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது. ஹரிஹரன் 29 ரன்களும் (நாட் அவுட்), அதிரடியாக ஆடிய விவேக் 28 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். இதனால் திண்டுக்கல் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விவேக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Similar News