டிஎன்பிஎல் கிரிக்கெட் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் இடத்துக்கு முன்னேற்றம்
சென்னை:
5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 36 ரன் வித்தியாசத்தில் கோவை கிங்சை வீழ்த்தியது.
முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. ஆர்.சதீஷ் 32 பந்தில் 64 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), சாய் கிஷோர் 27 பந்தில் 31 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய கோவை அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்னே எடுக்க முடிந்தது. அபிஷேக் தன்வார் அதிகபட்சமாக 29 ரன் எடுத்தார். சாய் கிஷோர், ஹரிஷ் குமார் தலா 2 விக்கெட்டும், சித்தார்த் , ஜெகநாத் சீனிவாஸ் , சோனு யாதவ், அலெக்சாண்டர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பெற்ற 4-வது வெற்றியாகும். இந்த நான்கு வெற்றியையும் தொடர்ச்சியாக பெற்றது. இதன் மூலம் அந்த அணி 9 புள்ளியுடன் முதல் இடத்துக்கு முன்னேறி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் மோதுகின்றன. திண்டுக்கல் அணி 6 புள்ளிகளுடனும், திருப்பூர் 5 புள்ளிகளுடனும் உள்ளன.
இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. மதுரை அணி 5 புள்ளிகளுடனும், சேலம் அணி 3 புள்ளிகளுடனும் உள்ளன.