செய்திகள்
தாவித் டோமாலா

50கிமீ நடைபந்தயம்: வாழ்நாளில் 2-வது முறையாக பங்கேற்று தங்கம் வென்று அசத்திய போலந்து வீரர்

Published On 2021-08-06 12:08 IST   |   Update On 2021-08-06 12:08:00 IST
20 கிமீ நடைபந்தயத்தில் தங்கம் வெல்வதையே குறிக்கோளாக கொண்டிருந்த போலந்து வீரர், 50 கிமீ நடைபந்தயத்தில் பங்கேற்ற 2-வது போட்டியிலேயே தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஆண்களுக்கான 50கிமீ நடைபந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் குர்ப்ரீத் சிங் பந்தய தூரத்தை முடிக்க முடியாமல் போட்டியில் இருந்து வெளியேறினார்.

இந்த போட்டியில் போலந்து வீரர் தாவித் டோமாலா பந்தய தூரத்தை 3 மணி 50 நிமிடம் 8 வினாடிகளில் (3:50:08) கடந்து தங்கப்பதக்கம் வென்றார். ஜெர்மனி வீரர் ஜோனாதன் ஹில்பெர்ட் 3 மணி 50 நிமிடம் 44 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றார். கனடா வீரர் எவன் டன்ஃபீ 3 மணி 50 நிமிடம் 59 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதில் என்ன விஷேசம் என்றால் தங்கப்பதக்கம் வென்ற போலந்து வீரர், அவரது வாழ்நாளிலேயே இதற்கு முன் ஒருமுறைதான் 50கிமீ நடைபந்தயத்தில் கலந்து கொண்டுள்ளாராம். தற்போது 2-வது முறையாக கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இதுகுறித்து போலந்து வீரர் தாவித் டோமாலா கூறுகையில் ‘‘இது எனக்கு மிகவும் சிறப்பானது. இதை என்னால் நம்பமுடியவில்லை. நான் 15 வயதில் என்னுடைய பயிற்சியை தொடங்கும்போது, ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என விரும்பினேன். இதற்காக கடுமையான  வகையில் பயிற்சி மேற்கொண்டேன்.

முதலில் நான் 20கிமீ நடைபந்தயத்தில்தான் தங்கப்பதக்கம் வெல்ல விரும்பினேன். ஆனால், இந்த வருடம் எல்லாமே மாறிவிட்டது. டுடின்ஸில் நான் 50கிமீ நடைபந்தயத்தில் கலந்து கொண்டேன்.  எனது வாழ்நாளிலேயே இது 2-வது 50கிமீ நடைபந்தய போட்டியாகும். இதில் தங்கம் வென்றுள்ளேன். இது வேடிக்கையாக உள்ளது. சரிதானே?’’ என்றார்.

Similar News