செய்திகள்
இந்திய மகளிர் ஆக்கி அணி

இந்திய மகளிர் ஆக்கி அணியும் வெண்கல பதக்கம் பெறுமா? இங்கிலாந்துடன் நாளை மோதல்

Published On 2021-08-05 07:42 GMT   |   Update On 2021-08-05 07:42 GMT
இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் ஆக்கி அணி வெண்கல பதக்கம் பெற்று புதிய வரலாற்றை நிகழ்த்துமா என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தது. இதேபோல இந்திய மகளிர் ஆக்கி அணியும் வெண்கலப்பதக்கம் பெற்று சாதிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஆக்கி அணி லீக் ஆட்டங்களில் தான் மோதிய முதல் 3 போட்டியில் தோல்வியை தழுவியது. நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல் கணக்கிலும், ஜெர்மனியிடம் 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்திடம் 1-4 என்ற கணக்கிலும் தோற்றது.

பின்னர் இந்திய மகளிர் ஆக்கி அணி சிறப்பாக ஆடி அயர்லாந்தை 1-0 என்ற கணக்கிலும், தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கணக்கிலும் வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய அணி கால் இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

ஆனால் அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்று இறுதிப்போட்டிக்கு நுழையும் வாய்ப்பை இழந்தது.

3-வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை நாளை (வெள்ளிக்கிழமை) எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு போட்டித் தொடங்குகிறது.

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் ஆக்கி அணி வெண்கல பதக்கம் பெற்று புதிய வரலாற்றை நிகழ்த்துமா என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News