செய்திகள்
மெஸ்ஸி - நெய்மர்

நேருக்கு நேர் மோதும் இரு ஜாம்பவான்கள்- நாளை காலை கோபா அமெரிக்கா இறுதி போட்டி

Published On 2021-07-10 10:13 GMT   |   Update On 2021-07-10 10:13 GMT
கோபா கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் நடப்பு சாம்பியன் பிரேசிலும், அதிகமுறை கோப்பையை வென்ற உருகுவே சாதனையை சமன் செய்யும் இலக்கில் அர்ஜென்டினாவும் பைனலில் நாளை மோதுகின்றன.
தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கோபா கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியில் தோற்ற பெரு - கொலம்பியா அணிகள் இன்று 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதிய நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் பிரேசில் - அர்ஜென்டினா மோதவுள்ளன. இப்போட்டி இந்திய நேரப்படி  நாளை காலை 5.30க்கு ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கிறது. நடப்பு சாம்பியனான  பிரேசில்  கோப்பையை தக்க வைத்துக் கொள்ள எல்லா முயற்சிகளையும் களத்தில் பயன்படுத்தும். இந்த ஆட்டத்தில் வென்றால் 10-வது முறையாக கோப்பை வென்ற சாதனையையும் பிரேசில் படைக்கும்.

ஏற்கனவே 20 முறை பைனலில் விளையாடி உள்ள பிரேசில் 9 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இப்போது 21வது முறையாக விளையாடும் இறுதி ஆட்டத்திலும் கோப்பை வெல்ல கார்லோஸ் காஸ்மிரா  தலைமையிலான அணியில் நட்சத்திர ஆட்டக்கார் நெய்மர், சில்வா, லூகாஸ்,  ரிச்சர்லிசன், எவர்டன் சோரெஸ், ஃபிரெட் என பலரும் முனைப்பு காட்டுவார்கள். 

அர்ஜென்டினா அணி இதுவரை 28 முறை கோபா கோப்பை பைனலில் விளையாடி 14 முறை கோப்பையை வென்றுள்ளது. கோபா கோப்பையை அதிக முறை  வென்ற உருகுவேயின் சாதனையை (15 முறை) சமன் செய்ய அர்ஜென்டினா வரிந்துகட்டுகிறது.

அதற்காக கேப்டன் மெஸ்ஸி தலைமையில் செர்ஜியோ, ரோட்ரிகோ, மார்டினெஸ்,  கோன்சாலெஸ்,  கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் ஆகியோரும் கலக்க காத்திருக்கிறார்கள். கோபா கோப்பை  தொடங்கிய 1916 முதல்  இதுவரை  இந்த இரு அணிகளும்  10 முறை பைனலில் மோதியுள்ளன. அவற்றில் 2000-ம் ஆண்டு வரை மோதிய 8 இறுதி ஆட்டங்களிலும் அர்ஜென்டினாதான் வென்று கோப்பையை கைப்பற்றி உள்ளது. அதே நேரத்தில் 2000-ம் ஆண்டுக்கு பிறகு மோதிய 2 இறுதி ஆட்டங்களிலும் பிரேசில்தான் வெற்றி வாகை சூடியுள்ளது. எனவே  2000-ம் ஆண்டுக்கு பிறகு இந்த இரு அணிகளும் மோதும் 3-வது இறுதி ஆட்டத்தில் வெல்லப்போவது பிரேசிலா? அர்ஜென்டீனாவா? என்று ஆவலுடன் கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அர்ஜென்டினா-பிரேசில் இதுவரை 111 முறை சர்வதேச ஆட்டங்களில் மோதியுள்ளன. அவற்றில்  பிரேசில்  46 ஆட்டங்களிலும், அர்ஜென்டினா 40 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. 25 ஆட்டங்கள் சமனில் முடிந்துள்ளன.

அர்ஜென்டீனா கடைசியாக மோதிய 10 சர்வதேச ஆட்டங்களில்  ஒன்றில் கூட தோற்கவில்லை. அவற்றில்  6 வெற்றி, 4 டிரா செய்துள்ளது. பிரேசிலும் கடைசியாக  விளையாடிய 10 ஆட்டங்களில் ஒன்றில் கூட தோற்கவில்லை. அவற்றில் 9 வெற்றி, ஒரு டிரா செய்துள்ளது.

உலகின் சிறந்த வீரர் விருதை 6 முறை பெற்றவரான 34 வயதான மெஸ்சிக்கு இன்னும் பெரிய போட்டிகளில் பட்டம் வெல்வது என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. 2014-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வி மற்றும் கோபா அமெரிக்கா கால்பந்தில் 2007, 2015, 2016-ம் ஆண்டுகளில் இறுதி சுற்றில் தோல்வியை சந்தித்துள்ள மெஸ்சிக்கு அந்த நீண்ட கால குறையை போக்க இது அருமையான சந்தர்ப்பமாகும். அர்ஜென்டினா 1993-ம் ஆண்டுக்கு பிறகு இந்த கோப்பையை வென்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

நெய்மார் தான் பிரேசில் அணியின் ஆணிவேர் என்பதில் சந்தேகமில்லை. 2019-ம் ஆண்டு கோபா அமெரிக்கா கோப்பையை பிரேசில் கைப்பற்றிய போது, காயத்தால் நெய்மார் அதில் விளையாடவில்லை. அதனால் நெய்மார் முதல்முறையாக இந்த கோப்பையை உச்சிமுகரும் முனைப்புடன் உள்ளார்.
Tags:    

Similar News