செய்திகள்
இந்திய அணி வீரரகள்

இந்தியா 66 ரன்னில் இங்கிலாந்தை வீழ்த்தியது - பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு

Published On 2021-03-24 09:56 GMT   |   Update On 2021-03-24 09:56 GMT
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்னில் வெற்றி பெற்றதன் மூலம் பந்து வீச்சாளர்களுக்கு விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

புனே:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன் குவித்தது.

தொடக்க வீரர் ஷிகர்தவான் 106 பந்தில் 98 ரன்னும் (11 பவுண்டரி, 2 சிக்சர்), லோகேஷ் ராகுல் 43 பந்தில் 62 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), குர்னால் பாண்ட்யா 31 பந்தில் 58 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 56 ரன்னும் எடுத்தனர்.

பென்ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும், மார்க்வுட் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 44.1 ஓவர்களில் 251 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் 66 பந்தில் 94 ரன்னும் (6 பவுண்டரி, 7 சிக்சர்), மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜேசன்ராய் 35 பந்தில் 46 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.

பிரசித்கிருஷ்ணா 4 விக்கெட்டும், ‌ஷர்துல்தாகூர் 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும், குர்னால் பாண்ட்யா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகளில் நாங்கள் பெற்ற மிகவும் இனிமையான வெற்றிகளில் ஒன்றாகும். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளும் சிறப்பாக இருந்தது.

பிரசித்கிருஷ்ணாவும், குர்னால் பாண்ட்யாவும் தங்களது அறிமுகப் போட் டியிலேயே அபாரமாக செயல்பட்டனர். ‌ஷர்துல்தாகூர், புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. பேட்டிங்கில் தவான், ராகுல் தங்களது திறமையை அபாரமாக வெளிப்படுத்தினார்கள். ராகுலும், குர்னால் பாண்ட்யாவும் அதிரடியாக ஆடியதால் அதிகளவில் ரன்களை குவிக்க முடிந்தது.

வீரர்களின் திறமையை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். 11 பேர் கொண்ட அணியில் இடம்பெறுவதற்கு தகுதியான வீரர்கள் பலர் இருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு இடத்திற்கும் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் கூறியதாவது:-

ஆடுகளம் சிறப்பாக இருந்தது. வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் காணப்பட்டது. அதே சமயம் சிறிது நேரம் தாக்குப்பிடித்தால் பெரிய ஸ்கோரை குவிக்கலாம். 10, 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்பதற்கு இப்படி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோற்பதை சிறந்ததாகவே நான் கருதுகிறேன்.

இவ்வாறு மார்கன் கூறினார்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் வருகிற 26-ந் தேதி புனேயில் நடக்கிறது.

Tags:    

Similar News