செய்திகள்
சதமடித்த சீன் வில்லியம்ஸ்

2வது டெஸ்ட் - ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்

Published On 2021-03-14 19:22 GMT   |   Update On 2021-03-14 19:22 GMT
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் 2வது இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 365 ரன்னில் ஆல் அவுட்டானது.
அபுதாபி:

ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்றது.
 
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் சட்ரன் அரை சதம் அடித்து 72 ரன்னில் வெளியேறினார். ஹஷ்மத்துல்லா ஷஹிதியும், அஸ்கர் ஆப்கனும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர். அஸ்கர் ஆப்கன் 164 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அபாரமாக ஆடிய ஷஹிதி இரட்டை சதமடித்து அசத்தினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 160 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 545 ரன்கள் எடுத்து டிக்ளேர் செதனர்.  

அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 287 ரன்னில் ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் பிரின்ஸ் மாஸ்வேர் அரை சதமடித்து 65 ரன்னில் ஆட்டமிழந்தார். கெவின் கவுசா, முசகண்டா ஆகியோர் தலா 41 ரன்னில் ஆட்டமிழந்தனர். சிக்கந்தர் ரசா பொறுப்புடன் ஆடி 85 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் சபக்வா 33 ரன்கள் எடுத்தார்.

பாலோ ஆன் பெற்ற ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் கேப்டன் சீன் வில்லியம்ஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். இவர் 8வது விக்கெட்டுக்கு டிரிபானோவுடன் ஜோடி சேர்ந்து 187 ரன்கள் சேர்த்தார். டிரிபானோ 95 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில் 365 ரன்னில் ஆட்டமிழந்தது. சீன் வில்லியம்ஸ் 151 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 7 விக்கெட்டு வீழ்த்தினார்.

இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. 26.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஹ்மத் ஷா அரை சதமடித்து 58 ரன்னில் ஆட்டமிழந்தார். இப்ராகிம் சட்ரன் 29 ரன்னில் வெளியேறினார்.

ஆட்ட நாயகன் விருது ஹஷ்மத்துல்லா ஷஹிதிக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது சீன் வில்லியம்சுக்கு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News