செய்திகள்
4-வது ஒரு நாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி: தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்க அணி
இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
லக்னோ:
இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4-வது ஒரு நாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ப்ரியா புனியா மற்றும் ஸ்மிரிதி மந்தனா இருவரும் முறையே 32 மற்றும் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த பூனம் ராவத், 10 பவுண்டரிகளை விளாசி, 123 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். அணியின் கேப்டன் மிதாலி ராஜ், 45 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஹர்மன்ப்ரீத் கவுர் 35 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54 ரன்கள் குவித்து அசத்தினார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் குவித்தது. பூனம் ராவத்(104 ரன்கள்), தீப்தி சர்மா(8 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 267 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.
தென்னாப்பிரிக்க அணியில் முதல் வரிசையில் களமிறங்கிய 4 வீராங்கனைகளும் அரைசதத்தைக் கடந்து அசத்தினர். இந்திய அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் கவுர், மான்சி ஜோஷி, கேய்க்வாட் ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 48.4 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது.