செய்திகள்
ரோகித் சர்மா

பேட்டிங்குக்கு சிறப்பாக இருந்தது: ஆடுகளத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரோகித் சர்மா

Published On 2021-02-26 22:56 GMT   |   Update On 2021-02-26 22:56 GMT
அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சிறப்பாக இருந்தது என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
ஆமதாபாத்:

ஆமதாபாத் டெஸ்டில் 66 மற்றும் 25 ரன்கள் வீதம் எடுத்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் சுழல் இன்றி நேராக வந்த பந்துகளில் தான் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு பேட்டிங் குழுவாக நாங்கள் பேட்டிங்கின் போது நிறைய தவறிழைத்து விட்டோம். முதல் இன்னிங்சில் எங்களது பேட்டிங் சரியில்லை. ஆடுகளத்தில் பயமுறுத்தும் அளவுக்கு பூதமோ, பூச்சாண்டியோ இல்லை. பேட்டிங் செய்வதற்கு அருமையாக இருந்தது. நிலைத்து நின்று விட்டால் ரன் குவிக்கலாம் என்பதை பார்க்க முடிந்தது.

இது போன்ற ஆடுகளங்களில் விளையாடும் போது, மனஉறுதியும், ரன் எடுக்கும் முனைப்பும் அவசியமாகும். தொடர்ந்து தடுப்பாட்டத்திலேயே ஈடுபட்டு கொண்டிருக்க முடியாது. களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பது மட்டுமல்ல, சீராக ரன் எடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. அதே சமயம் நல்ல பந்துகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அந்த வகையில் தான் எனது அணுகுமுறை இருந்தது. தெளிவான மனநிலையில் விளையாட வேண்டும். ஸ்வீப் ஷாட்டில் ஆட்டம் இழந்த அந்த பந்துக்கு முன்பு வரை எனது திட்டமிடல் சரியாகவே இருந்தது.

எனவே ஆடுகளத்தை குறை சொல்வதற்கு எதுவும் இல்லை. சொல்லப்போனால் இது வழக்கமான இந்திய ஆடுகளம் என்பதே எனது கருத்து. 2-வது டெஸ்ட் நடந்த சென்னை சேப்பாக்கத்தில் இதை விட பந்து அதிகமாக சுழன்று திரும்பியது. ஆனால் அங்கு நிறைய பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுத்தனர். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இங்கு நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை என்பதே உண்மை.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
Tags:    

Similar News