செய்திகள்
பிரித்வி ஷா

விஜய் ஹசாரே டிராபி: பிரித்வி ஷா 227, சூர்யகுமார் யாதவ் 133: 457 ரன்கள் குவித்த மும்பை

Published On 2021-02-25 09:22 GMT   |   Update On 2021-02-25 09:22 GMT
பிரித்வி ஷா ஆட்டமிழக்காமல் 227 ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட் அணியில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஒரு ஆட்டத்தில் மும்பை - புதுச்சேரி அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற புதுச்சேரி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் ஜெய்ஸ்வால், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து பிரித்வி ஷா உடன் விக்கெட் கீப்பர் தாரே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. தாரே 56 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஆனால் பிரித்வி ஷா சதம் விளாசினார். 3-வது விக்கெட்டுக்கு பிரித்வி ஷா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியை வெளிப்படுத்தியது. சூர்யகுமார் யாதவ் 58 பந்தில் 133 ரன்கள் விளாசினார். பிரித்வி ஷா கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதத்தை இரட்டை சதமாக மாற்றி 152 பந்தில் 227 ரன்கள் குவித்தார்.

இதனால் மும்பை அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 457 ரன்கள் குவித்தது. கேப்டனாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை பிரித்வி ஷா படைத்துள்ளார். இதற்கு முன் கிரேம் பொல்லாக் 1974-ல் பார்டர் அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 222 ரன்கள் அடித்திருந்தார். தற்போது பிரித்வி ஷா அதை முறியடித்துள்ளார்.

சேவாக் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 2011-ல் 219 ரன்கள் குவித்துள்ளார். ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 2017-ல் இலங்கைக்கு எதிராக 208 ரன்கள் குவித்துள்ளார்.
Tags:    

Similar News