செய்திகள்
அக்சார் பட்டேல்

கண் மூடி விழிப்பதற்குள் அக்சார் பட்டேல், அஷ்வின் சுழலில் சிக்கி 112 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து

Published On 2021-02-24 13:13 GMT   |   Update On 2021-02-24 13:50 GMT
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கியது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியான இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆட்டத்தின் 3-வது ஓவரில் தொடக்க வீரர் டொமினிக் சிப்லியை ரன்ஏதும் எடுக்காத நிலையில் இஷாந்த் சர்மா வெளியேற்றினார். 100-வது போட்டியில் களம் இறங்கிய இஷாந்த் சர்மா முதல் விக்கெட்டை வீழ்த்தி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வழி காட்டினார்.

7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீச வந்தார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே பேர்ஸ்டேவ் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஜாக் க்ராலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். பந்து டர்ன் ஆக அக்சார் பட்டேல், அஷ்வின் அபாரமாக பந்து வீசினர்.

இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் நிலையில் 17 ரன் எடுத்த நிலையில் அஷ்வின் பந்தில் வெளியேறினார். மறுமுனையில் அரைசதம் அடித்த க்ராலி 54 ரன்கள் எடுத்து அக்சார் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி தேனீர் இடைவேளை வரை (முதல் செசன்) 27 ஓவர்களில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும், ஒல்லி போப் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரிலேயே ஒல்லி போப் 1 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து பென் ஸ்டோக்ஸ் 6 ரன்னில் வெளியேறினார். அக்சார் பட்டேல் வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது.

அந்த அணியால் 48.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. அக்சார் பட்டேல் 21.4 ஓவரில் 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் அள்ளினார். அஷ்வின் 16 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
Tags:    

Similar News