செய்திகள்
அஸ்வின் - காம்பீர்

ஒருநாள், 20 ஓவர் போட்டியில் அஸ்வினை சேர்க்காதது வேதனை அளிக்கிறது - காம்பீர் கருத்து

Published On 2021-02-24 09:51 GMT   |   Update On 2021-02-24 09:51 GMT
அஸ்வினை ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் சேர்க்காதது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் வீரர் காம்பீர் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். தமிழகத்தை சேர்ந்த அவர் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

34 வயதான அஸ்வின் கடைசியாக 2017-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு வெள்ளைப் பந்து போட்டியான ஒரு நாள் ஆட்டம் மற்றும் 20 ஓவரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அஸ்வின் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே பொருத்தமானவர் என்று தேர்வுக்குழு கருதி அவரை சேர்க்காமல் உள்ளது.

தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 2 ஆட்டத்தில் அவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதோடு 2-வது டெஸ்டில் சதம் அடித்தார்.

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் அவர் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும் தேர்வுக்குழு அவரை தொடர்ந்து புறக்கணித்தது.

இந்த நிலையில் அஸ்வினை ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் சேர்க்காதது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் வீரர் காம்பீர் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர், ஒருநாள் தொடரில் அஸ்வினை தேர்வு செய்யாமல் ஒதுக்கியது துரதிர்ஷ்டவசமானது. டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை நெருங்கிய வீரர், 5 டெஸ்டில் சதங்களை அடித்துள்ளார்.

ஆனால் அவர் தொடர்ந்து ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் மட்டும் புறக்கணிக்கப்படுவது வேதனையானது. அவரது செயல்பாடு அருமையாக இருந்து வருகிறது.

பந்துவீச்சில் பல்வேறு வேறுபாடுகளை ஏற்படுத்தக் கூடிய திறமையான பந்து வீச்சாளர் அஸ்வின் ஆவார். ஏராளமான போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒவ்வொரு ஆட்டத்திலும் தனக்கென முத்திரையை பதித்துள்ள அவரை புறக்கணித்திருக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல முன்னாள் வேகப்பந்து வீரர் நெக்ராவும் அஸ்வினுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News