செய்திகள்
ஷ்ரேயாஸ் அய்யர்

விஜய் ஹசாரே டிராபி: ஷ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா சதம்- மும்பை, டெல்லி அணிகள் வெற்றி

Published On 2021-02-23 17:54 GMT   |   Update On 2021-02-23 17:54 GMT
விஜய் ஹசாரே டிராபியில் ஷ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா சதம் விளாச மும்பை மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.
விஜய் ஹசாரே டிராபியில் இன்று 10 ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் மும்பை - மகாராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் விளையாடிய மகாராஷ்ரா அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் விளாசியது. அந்த அணியின் யாஷ் நஹார் (119), அசிம் காஜி (104) சதம் விளாசினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் 280 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் யாஷவி ஜெய்ஸ்வால் 40 ரன்களும், பிரித்வி ஷா 34 ரன்களும் அடித்தனர்.

அதன்பின் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 99 பந்தில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க மும்பை அணி 47.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் டெல்லி - புதுச்சேரி அணிகள் மோதின. டெல்லி அணியின் துருவ் ஷோரே 132 ரன்களும், நிதிஷ் ராணா 137 ரன்களும் விளாச 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் குவித்தது.

பின்னர் 355 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் புதுச்சேரி அணி களம் இறங்கியது. டெல்லி அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 175 ரன்னில் சுருண்டது. இதனால் 179 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாச்தில் இமாச்சல பிரதேசம் அணியும், அருணாச்சல பிரதேசம் அணியை அசாம் 5 விக்கெட்டிலும், மிசோரமை நாகலாந்து 29 ரன்னிலும், சிக்கிமை மேகாலயா 88 ரன்னிலும், மணிப்பூரை 7 விக்கெட்டில் உத்தரகாண்டும், ஹரியானாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவும், சர்வீசஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீர் அணியும், பெங்காலை சண்டிகர் அணியும் வீழ்த்தின.
Tags:    

Similar News