செய்திகள்
ஆஸ்லே பார்டி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - முதல்நிலை வீராங்கனை ஆஸ்லே அதிர்ச்சி தோல்வி

Published On 2021-02-17 10:04 GMT   |   Update On 2021-02-17 10:04 GMT
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

மெல்போர்ன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடந்த பெண்கள் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) - 25-வது இடத்தில் உள்ள கரோலினா முச்கோவா (செக் குடியரசு) மோதினார்கள்.

இதில் யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்லே பார்டி அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். முச்கோவா 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்லேவை வீழ்த்தி முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

கரோலினா முச்கோவா அரை இறுதியில் 22-ம் நிலை வீராங்கனையான ஜெனிபர் பிராடியுடன் (அமெரிக்கா) மோதுகிறார்.

பிராடி கால் இறுதியில் 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த ஜெசிகா பெகுலாவை தோற்கடித்தார்.

மற்றொரு அரை இறுதியில் நவோமி வசோகா (ஜப்பான்)- செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்)- 5-வது வரிசையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதுகிறார்கள்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த மெட்வதேவ்- ருப்லேவ் மோதுகிறார்கள்.

Tags:    

Similar News