செய்திகள்
விராட் கோலி

டாஸ் ஒரு விசயமே அல்ல... விமர்சனங்களுக்கு விராட் கோலி பதிலடி

Published On 2021-02-16 10:55 GMT   |   Update On 2021-02-16 10:55 GMT
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்த நிலையில் விராட் கோலி அதற்கு பதில் அளித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 134 ரன்களும், 2-வது இன்னிங்சில் 164 ரன்களும் எடுத்து ஆல்அவுட் ஆனது.

ஆடுகளத்தில் பந்து முதல் நாளின் முதல் பந்தில் இருந்தே டர்ன் ஆக ஆரம்பித்தது. இந்திய அணி டாஸ் தோற்றிருந்தால் போட்டியில் வெற்றி பெற்றிருக்காது. இது ஒரு சவாலான ஆடுகளம் எனத் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு விராட் கோலி கூறுகையில் ‘‘ஆடுகளம் டர்ன் ஆகிறது, பவுன்ஸ் ஆகிறது என்பது பற்றி நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் எங்களுடைய மனஉறுதியை வெளிப்படுத்தி, சிறந்த ஆட்டத்தை தொடர்ந்தோம். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 600 ரன்கள் சேர்த்துள்ளோம். நாங்கள் போதுமான அளவிற்கு ரன்கள் எடுத்துவிட்டால், பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.

டாஸ் பெரிய விசயமே அல்ல. நீங்கள் எங்களுடைய 2-வது இன்னிங்சை பார்த்தீர்கள் என்றால் ஏறக்குறைய 300 ரன்கள் அடித்திருப்போம். டாஸ்தான் காரணம் என்றால் அது நியாயமானது அல்ல. எந்த ஆடுகளமாக இருந்தாலும் சரி, இரண்டு அணிகளும், முதல் செசனில் இருந்து ஆட்டத்தை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும். போட்டியில் இதுதான் சரியானது.

ரசிகர்கள் இன்றி முதல் போட்டியில் விளையாடியது சற்று விசித்திரமாக இருந்தது. முதல் இரண்டரை நாட்களில் ஆடுகளம் மிகவும் பிளாட்ஆக இருந்தது. நான் உள்பட வீரர்கள் எனர்ஜியை பெற முடியவில்லை.

ரசிகர்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்த போட்டியில் நாங்கள் மன உறுதியுடன் திடமான ஆட்டத்தை வெளிப்படுத்த சிறந்த உதாரணம். அதற்கு ரசிகர்கள் கூட்டம் முக்கிய காரணம். கடுமையான வெயில் தாக்கத்தில் நான் பந்து வீச ஓடும்போது, ரசிகர்கள் என்னை உத்வேகம் செய்ய வேண்டியது அவசியம். இது எங்களுக்கு சரியான போட்டியாக அமைந்தது’’ என்றார்.
Tags:    

Similar News