செய்திகள்
ரோகித் சர்மா

சேப்பாக்கம் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் 249 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்தியா

Published On 2021-02-14 15:36 GMT   |   Update On 2021-02-14 15:36 GMT
சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் இந்தியா 2-வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுக்க, 2-வது நாள் ஆட்ட முடிவில் 249 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ரோகித் சர்மா 161 ரன்களும்,  ரஹானே 67 ரன்களும், ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும் எடுத்தனர். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். மொயீன் அலி 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரிலேயே ரோரி பேர்ன்ஸை இஷாந்த் சர்மா சாய்த்தார். அதன்பின் அஷ்வின், அக்சார் பட்டேல் சுழற்பந்து வீச்சில் அசத்த இங்கிலாந்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது.

அஷ்வின் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட் சாய்க்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 59.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 134 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சார் பட்டேல், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா முதல் இன்னிங்சில் 195 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

195 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்ததால் ஷுப்மான் கில், ரோகித் சர்மா தடுமாறினர். ரோகித் சர்மா இன்று முழுவதும் தாக்குப்பிடிக்க ஷுப்மான் கில் 14 ரன்னில் ஜேக் லீச் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து புஜாரா களம் இறங்கினார்.

இந்தியா இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 25 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளது.

தற்போது வரை இந்தியா 249 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கைவசம் 9 விக்கெட் உள்ளது. 300 ரன்கள் முன்னிலைப் பெற்றாலே இங்கிலாந்து அணியால் சேஸிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். இதனால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது.
Tags:    

Similar News