செய்திகள்
இந்திய கிரிக்கெட் வாரியம்

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஏப்ரல் 2-வது வாரத்தில் தொடக்கம்?

Published On 2021-01-31 09:19 GMT   |   Update On 2021-01-31 09:19 GMT
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஏப்ரல் 2-வது வாரத்தில் தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.

மும்பை:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வருடம் தோறும் இந்த போட்டி இந்தியாவில் நடத்தப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடைபெற்றது.

14-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறுமா? என்று கேள்வி எழுந்தது. இதனால் மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே கோப்பை (ஆண்கள் 50 ஓவர் போட்டி), பெண்கள் தேசிய ஒருநாள் போட்டி பிப்ரவரி- மார்ச் மாதம் நடக்கிறது.

இந்த போட்டிக்கு பிறகு ஏப்ரல் 2-வது வாரத்தில் ஐ.பி.எல் போட்டியை தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 11 முதல் 14-ந் தேதிக்குள் ஐ.பி.எல். போட்டி தொடங்கப்படும். ஜூன் முதல் வாரத்தில் ஐ.பி.எல் போட்டியை நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 6-ந் தேதி இறுதிப் போட்டி நடைபெறலாம்.

14-வது ஐ.பி.எல். போட்டி பெரும்பாலான ஆட்டங்களை மும்பையில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்குள்ள வான்கடே ஸ்டேடியம், பிரபோன் மைதானம், டி.ஒய்.படேல் ஸ்டேடியம், ரிலையன்ஸ் மைதானம் (நவி மும்பை), புனே ஆகிய இடங்களில் போட்டி நடைபெறலாம். இதேபோல அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான சர்தார் படேல் மைதானத்திலும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

கொரோனா பரவலால் உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. 87 ஆண்டுகால வரலாற்றில் தற்போதுதான் ரஞ்சிக் கோப்பை போட்டி முதல் முறையாக நடைபெறாமல் ரத்தாகி உள்ளது.

Tags:    

Similar News