செய்திகள்
வெற்றிக் கோப்பையுடன் ஜோ ரூட்

2-வது போட்டியிலும் இலங்கையை நசுக்கியது இங்கிலாந்து: 2-0 என ஒயிட்வாஷ் செய்தது

Published On 2021-01-25 13:51 GMT   |   Update On 2021-01-25 13:51 GMT
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன், ஒயிட்வாஷும் செய்தது.
இலங்கை- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் காலே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது இலங்கை. மேத்யூஸ் சதம் அடிக்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ரன்கள் குவித்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (186) அபார பேட்டிங்கால் 344 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் லசித் எம்புல்டேனியா 7 விக்கெட் சாய்த்தார்.

37 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 126 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ், ஜேக் லீச் தலா 4 விக்கெட்டும, ஜோ ரூட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் 163 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்று இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் ஜேக் கிராவ்லி 13 ரன்னிலு்ம, ஜானி பேர்ஸ்டோவ் 29 ரன்களிலும், ஜோ ரூட் 11 ரன்னிலும்,  டான் லாரன்ஸ் 2 ரன்னிலும் வெளியேறினர்.

இதனால் இங்கிலாந்து 89 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு டாம் சிப்லியுடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தது. டாம் சிப்லி ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், ஜோஸ் பட்லர் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து 43.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.

ஏற்கனவே முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்ததால், 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கையை சொந்த மண்ணிலேயே ஒயிட் வாஷ் செய்துள்ளது.

இதற்கு முன் இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 எனக் கைப்பற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News