செய்திகள்
பிராட் ஹாடின்

ஒருவருமே வெற்றி பெறாதபோது, இந்தியா ஏன் பிரிஸ்பேன் போக வேண்டும்?: பிராட் ஹாடின்

Update: 2021-01-03 17:37 GMT
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் தொடங்குகிறது. அதன்பின் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கப்பா என அழைக்கப்படும் பிரிஸ்பேன் மைதானத்தில் நடக்கிறது.
இந்த மைதானத்தில் சுமார் 30 வருடத்திற்கு மேலாக எந்த அணியும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது கிடையாது. இந்தியாவும் இந்த மைதானத்தில் மிகவும் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் வழிகாட்டு நெறிமுறைகளை காரணம் காட்டி இந்திய அணி பிரிஸ்பேன் செல்ல விரும்பவில்லை என்ற செய்தி வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், இந்திய அணி பிரிஸ்பேன் செல்லாத வகையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிராட் ஹாடின் கூறுகையில் ‘‘கிரிக்கெட் பார்வையில் பார்க்கும்போது, இந்திய அணி ஏன் கப்பா செல்ல விரும்பனும்?. கப்பாவில் யாரும் வென்றதில்லை. ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது, ஆஷஸ் போட்டியை தவிர்த்து அங்கு யாரும் ஆஸ்திரேலியாவை எதிர்த்து வெற்றி பெற்றது கிடையாது.

இந்திய அணி வீரர்களை பற்றி ஒரு விசயத்தை நினைக்க வேண்டியுள்ளது. அவர்கள் மிகமிக நீண்ட நாட்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்துள்ளனர். இதனால் அவர்கள் சற்று சோர்வு அடைந்திருக்கலாம்.

குயின்ஸ்லாந்தில் வைரஸ் தொற்று அதிகரிக்கவில்லை என்றால், டெஸ்ட் போட்டியை மாற்ற முடியாது. ஏனென்றால், வீரர்கள் கோரன்டைனில்தான் உள்ளனர். நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு வரும்போது, இங்கே என்ன நடந்து கொண்டிருந்தது என்பது தெளிவாக தெரிந்திருக்கும். இங்குள் கட்டுப்பாடு உங்களுக்கு தெரிந்திருக்கும். இது நடக்கும் என்றும் தெரிந்திருக்கும்.

இந்திய அணியை போன்று ஆஸ்திரேலிய அணியும் நீண்ட நாட்கள் கோரன்டைனில் இருந்துள்ளனர். அவர் இதுபோன்று கேட்கவில்லை. என்னைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் கப்பா மைதானத்தில் விளையாடாமல் இருப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News