செய்திகள்
ஜேமிசன்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் - பாகிஸ்தான் 297 ரன்களுக்கு ஆல் அவுட்

Published On 2021-01-03 06:57 GMT   |   Update On 2021-01-03 06:57 GMT
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது.

கிறிஸ்ட்சர்ச்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

2 டெஸ்ட் போட்டி தொடரில் மவுண்ட் மவுக்கானுவில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தான் திணறியது. 83 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்தது.

தொடக்க வீரர் ஷான் மசூத் ரன் எதுவும் எடுக்காமல் சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்கவீரர் ஆபித் அலி (25 ரன்), ஹாரிஸ் சோகைல் (ஒரு ரன்), பவாத் ஆலம் (2 ரன்) ஆகியோரது விக்கெட்டை ஜேமிசன் வீழ்த்தினார்.

5-வது விக்கெட்டான அசார் அலி- கேப்டன் முகமது ரிஸ்வான் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக ஆடிய ரிஸ்வான் 61 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவரது விக்கெட்டையும் ஜேமிசனே கைப்பற்றினார்.

அடுத்து பஹீம் அஸ்ரப் களம் வந்தார். மறுமுனையில் இருந்தனர் அசார் அலி தொடர்ந்து சிறப்பாக ஆடினார். தேனீர் இடைவேளையின் போது பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன் எடுத்தது. அசார் அலி 90 ரன்னிலும், அஸ்ரப் 26 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து மீண்டும் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. அசார் 93 ரன்னிலும் 48, ரன்னிலும் வெளியேறினார். 83.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணி தரப்பில் ஜெமிசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சவுத்தி, போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் ஹெண்ட்ரி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News