செய்திகள்
ரோகித் சர்மா

சிட்னி டெஸ்டில் ரோகித் சர்மா எந்த வரிசையில் ஆடுவார்?

Published On 2021-01-02 07:08 GMT   |   Update On 2021-01-02 07:08 GMT
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் 11 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா எந்த வரிசையில் விளையாட போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்னி:

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

4 டெஸ்ட் போட்டி தொடரில் அடிலெய்டில் பகல்-இரவாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது.

இதற்கு மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி சரியான பதிலடி கொடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 7-ந் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா விளையாடுகிறார். காயம் காரணமாக முதல் 2 டெஸ்டில் விளையாடாத அவர் அணியோடு தாமதமாக இணைந்து கொண்டார்.

14 நாட்கள் தனிமைக்கு பிறகு ரோகித் சர்மா இந்திய வீரர்களுடன் இணைந்து சிட்னி மைதானத்தில் பயிற்சியை தொடங்கினார். அவருக்கு அணியின் துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புஜாராவுக்கு பதிலாக அவர் கடைசி 2 டெஸ்டில் துணை கேப்டனாக பணியாற்றுவார்.

11 பேர் கொண்ட இந்திய அணியில் ரோகித் சர்மா எந்த வரிசையில் விளையாட போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தொடக்க வீரராக ஆடுவாரா? அல்லது 5-வது வரிசையில் களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அணி நிர்வாகமே இதுகுறித்து இறுதி முடிவை எடுக்கும். தொடக்க வீரரான மயங்க் அகர்வால் இதுவரை நடந்த 2 டெஸ்டிலும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இதனால் அவர் இடத்தில் ரோகித் சர்மா தொடக்க வீரராக ஆடலாம் என்று கருதப்படுகிறது.

இதேபோல மிடில் ஆர்டரில் விளையாடும் ஹனுமா விகாரியும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இதனால் அவரது வரிசையான 5-வது இடத்தில் ரோகித் சர்மா களம் இறக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

ரோகித் சர்மாவின் இட வரிசை குறித்து இன்னும் அணி நிர்வாகத்தால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

33 வயதான ரோகித் சர்மா 32 டெஸ்டில் விளையாடி 2,141 ரன் எடுத்துள்ளார். சராசரி 46.54 ஆகும். 6 சதமும், 10 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 212 ரன் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக) குவித்துள்ளார்.

இதில் வெளிநாடுகளில் 18 டெஸ்டில் 816 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 26.32 ஆகும். அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்துள்ளார்.

ரோகித் சர்மா தொடக்க வீரர் வரிசையில் 5 டெஸ்டில் 3 சதத்துடன் 556 ரன் எடுத்துள்ளார். 5-வது வரிசையில் 9 டெஸ்டில் 3 அரை சதத்துடன் 437 ரன் எடுத்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டிக்கு பிறகு எந்தவொரு ஆட்டத்திலும் விளையாடாமல் ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் விளையாட இருக்கிறார். இதனால் அவரால் நல்ல நிலையில் ஆட முடியுமா? என்ற சந்தேகமும் இருக்கிறது.

Tags:    

Similar News