செய்திகள்
டி நடராஜன்

இந்திய டெஸ்ட் அணியில் உமேஷ் யாதவுக்குப் பதில் டி நடராஜன்: பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2021-01-01 09:59 GMT   |   Update On 2021-01-01 09:59 GMT
காயம் அடைந்துள்ள உமேஷ் யாதவுக்குப் பதிலாக இந்திய டெஸ்ட் அணியில் டி நடராஜன் சேர்க்கப்பட்டதை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. 2-வது இன்னிங்சில் 3.3 ஓவர் மட்டுமே பந்து வீசிய நிலையில் உமேஷ் யாதவ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார்.

பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறிய உமேஷ் யாதவுக்கு கணுக்கால் தசைநாரில் கிழிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோர் காயத்தால் விலகிய நிலையில் உமேஷ் யாதவின் காயம் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும். அவருக்கு பதிலாக கூடுதலாக தற்போது வலைபயிற்சி பந்து வீச்சாளராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த டி நடராஜன் சேர்க்கப்படுவார் என செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது டி நடராஜன் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனாலும் சிட்னியில் 7-ந்தேதி தொடங்கும் 3-வது டெஸ்டுக்கான களம் காணும் இந்திய அணியில் நடராஜனுக்கு இடம் கிடைக்காது என்று இந்திய அணியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல்தர கிரிக்கெட்டில் அவரை விட அனுபவம் வாய்ந்த ஷர்துல் தாகூர் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News