செய்திகள்
சுனில் கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட்களில் கோலிக்கு மாற்றாக யாரை களம் இறக்கலாம்? கவாஸ்கர் யோசனை

Published On 2020-12-14 07:25 GMT   |   Update On 2020-12-14 07:25 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட்களிலும் விராட் கோலி இடத்தில் யாரை களம் இறக்கலாம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும், 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 17-ந் தேதி பகல்-இரவாக அடிலெய்டில் தொடங்குகிறது.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார். எஞ்சிய 3 டெஸ்டில் ஆட மாட்டார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால், ஆஸ்திரேலிய பயணத்தில் இருந்து பாதியில் நாடு திரும்புகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி 3 டெஸ்டில் விளையாடாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் 3 டெஸ்ட்களிலும் விராட் கோலி இடத்தில் யாரை களம் இறக்கலாம்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கோலி ஒரு டெஸ்டில்தான் விளையாடுகிறார். அதற்கு பிறகு ரகானே கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துவார். ஆனால் கோலியின் 4-வது வரிசையில் களம் இறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழுகிறது.

கோலி இல்லாத இடத்தில் எனக்கு தெரிந்து ரகானே களம் இறங்குவார் என்று நினைக்கிறேன். அப்போது ரகானே இடத்தில் கே.எல்.ராகுலோ அல்லது சுப்மன்கில்லையோ களம் இறக்கினால் சரியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News