செய்திகள்
நடராஜன் - சச்சின் தெண்டுல்கர்

டெஸ்ட் போட்டியிலும் நடராஜனை சேர்க்கலாம் - தெண்டுல்கர் கருத்து

Published On 2020-12-11 12:21 IST   |   Update On 2020-12-11 12:21:00 IST
நடராஜனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

தமிழகத்தை சேர்ந்த முன்னணி வேகப்பந்து வீரர் டி.நடராஜன். ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக பந்து வீசிய அவருக்கு ஆஸ்திரேலிய பயணத்துக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நடராஜன் 2 விக்கெட் சாய்த்தார். 20 ஓவர் தொடரில் அவர் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா தொடரை வெல்ல அவரது பந்துவீச்சு முக்கிய காரணமாக இருந்தது. தனது முதல் சர்வதேச போட்டிகளிலேயே அவர் முத்திரை பதித்தார்.

நடராஜனின் பந்துவீச்சை கேப்டன் விராட் கோலி, ஹர்த்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டி இருந்தனர்.

இந்த நிலையில் நடராஜனின் பந்து வீச்சை கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் பாராட்டி உள்ளார். அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெண்டுல்கர் கூறியதாவது:-

டெஸ்ட் அணியில் இஷான் சர்மா இடம்பெறாத நிலையில் அவரது இடத்தில் நடராஜனை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம். ஏனெனில் அவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் நடராஜனை சேர்க்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

Similar News