செய்திகள்
டி.நடராஜன்

டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன் - விராட் கோலி பாராட்டு

Published On 2020-12-09 05:45 IST   |   Update On 2020-12-09 13:10:00 IST
நடராஜன் டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
மெல்போர்ன்:

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 நிலைகளிலான போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், ஒரு நாள் போட்டி தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.  இதனை தொடர்ந்து நடந்த இருபது ஓவர் போட்டியில் இடதுகை பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியின் முகமது சமி மற்றும் பும்ரா விளையாடாத நிலையில் நடராஜன் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தினார். தனது அறிமுக போட்டியிலேயே அவரது அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டது. டி 20 தொடரில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.

இதுதொடர்பாக கேப்டன் விராட் கோலி கூறுகையில், பும்ரா மற்றும் சமி இல்லாத சூழலில் சிறந்த முறையில் நடராஜன் விளையாடினார். நெருக்கடியான நிலையில் உண்மையில் நின்று விளையாடினார். சர்வதேச அளவில், நடைபெற்ற போட்டியில் சிறந்த ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் மிக தேர்ந்தவராக, கடின உழைப்பு மற்றும் பணிவு கொண்டவராகவும் இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இடதுகை பந்து வீச்சாளர் என்பவர் எப்பொழுதும் அணிக்கு கிடைக்க கூடிய ஒரு சொத்து. இதேபோன்று களத்தில் அவரது ஆட்டம் தொடர்ந்து வெளிப்பட்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு சிறந்த ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

Similar News