செய்திகள்
டி. நடராஜன்

ஆஸி. பேட்ஸ்மேன்களை பயமுறுத்திய டி.நடராஜன்: 20 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

Published On 2020-12-06 16:11 IST   |   Update On 2020-12-06 23:55:00 IST
சிட்னியில் நடைபெற்று வரும் 2-வது டி20 போட்டியில் மற்ற பந்து வீச்சாளர்கள் 35 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த நடராஜன் 20 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியா தொடக்க வீரர் மேத்யூ வடே களம் இறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் பகுதியில் சிறப்பாக பந்து வீசினால், டி. நடராஜனை டெத் ஓவரில் பயன்படுத்திக் கொள்ளலாம் என விராட் கோலி நினைத்திருந்தார்.

தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அடுத்த ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஷர்துல் தாகூர் 3-வது ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 4-வது ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா 4 ஓவருக்குள் 46 ரன்கள் குவித்தது.

இந்தியாவுக்கு நெருக்கடி உண்டாக ஐந்தாவது ஓவரில் விராட் கோலி டி நடராஜனை பந்து வீச அழைத்தார். முதல் பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்த நடராஜன் 2-வது ரன் விட்டுக்கொடுக்கவில்லை. 3-வது பந்தில் ஆர்கி ஷார்ட்டை அவுட்டாக்கினார். அடுத்த 3-பந்துகளிலும் ஸ்டீவ் ஸ்மித்தை ரன் ஏதும் அடிக்க விடாமல் அட்டகாசமாக பந்து வீசினார். 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

ஆனால் மறுமுனையில் ரன்கள் சென்று கொண்டே இருந்தது. 9-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் மேக்ஸ்வெல், ஸ்மித்திற்கு தண்ணி காட்டி 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். 15-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் ஸ்மித், ஹென்ரிக்ஸ் ஆகியோருக்கு எதிராக துல்லியமாக பந்து வீசி 5 ரன்கள் மட்டும்தான் விட்டுக்கொடுத்தார்.

19-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஹென்ரிக்ஸை வீழ்த்தினார். கடைசி பந்தில் பவுண்டரி விட்டுக்கொடுக்க 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் சாய்த்தார். மொத்தமாக 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

மற்ற பந்து வீச்சாளர்களான தீபக் சாஹர் 48 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 35 ரன்களும், ஷர்துல் தாகூர் (1 விக்கெட்) 39 ரன்களும், சாஹல் (1 விக்கெட்) 51 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

கடந்த போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய நிலையில், இந்த போட்டியிலும் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆஸ்திரேலிய  பேட்ஸ்மேன்கள் இவரது பந்தை அடித்து ஆட விரும்பாமல் தடுத்தாடவே விரும்பினர்.

Similar News