செய்திகள்
ஹர்மன்பிரீத் கவுர்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் சேர்ப்பு

Published On 2020-11-18 20:13 GMT   |   Update On 2020-11-18 20:13 GMT
4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் முதல்முறையாக பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இடம் பெறுகிறது.
துபாய்:

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் வருகிற 2022-ம் ஆண்டில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. 4 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டியில் முதல்முறையாக பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இடம் பெறுகிறது. ஏற்கனவே 1998-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மட்டும் அரங்கேறியது. ஆனால் அதன் பிறகு நடந்த போட்டிகளில் கிரிக்கெட் நீக்கப்பட்டது. 2022-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டில் அறிமுகமாகும் பெண்கள் 20 ஓவர் போட்டிக்கான தகுதி சுற்று குறித்த விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.), காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனமும் இணைந்து நேற்று வெளியிட்டன.

இதன்படி 8 அணிகள் பங்கேற்கும் காமவெல்த் விளையாட்டு கிரிக்கெட் போட்டிக்கு, போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் அடுத்த ஆண்டு (2021) ஏப்ரல் 1-ந் தேதியில் 20 ஓவர் போட்டி தரவரிசையில் முன்னணியில் இருக்கும் மற்ற 6 அணிகள் நேரடியாக தகுதி பெறும். இந்த போட்டி எட்ஜ்பஸ்டனில் நடைபெறும். எஞ்சிய ஒரு அணி எது? என்பதை நிர்ணயிப்பதற்கான தகுதி சுற்று போட்டி குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்கு முன்னதாக தகுதி சுற்று போட்டி நடத்தப்படும் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட் அங்கம் வகிக்க இருப்பது குறித்து இந்திய பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கருத்து தெரிவிக்கையில், ‘காமன்வெல்த் விளையாட்டில் கிரிக்கெட் ஆட்டம் சேர்க்கப்பட்டு இருப்பது எல்லா வீராங்கனைகளுக்கு மட்டுமின்றி கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய விஷயமாகும். காமன்வெல்த் போட்டியில் நானும் பங்கேற்பேன் என்று நம்புகிறேன். தரமான மற்றும் சுவாரஸ்யம் நிறைந்த ஆட்டம் மூலம் இந்த போட்டி மிகவும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்’ என்றார்.
Tags:    

Similar News