செய்திகள்
ஐபிஎல்

அடுத்த ஐ.பி.எல். போட்டியில் 9 அணிகள்?: வீரர்களுக்கான மெகா ஏலத்திற்கு பிசிசிஐ திட்டம்

Published On 2020-11-11 10:45 GMT   |   Update On 2020-11-11 10:45 GMT
அகமதாபாத்தை மையமாகக் கொண்டு ஐபிஎல் தொடரில் 9-வது அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் இதில் பங்கேற்றன. 4-வது சீசனில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 8 ஆக குறைக்கப்பட்டது. 2014-ம் ஆண்டு போட்டியில் இருந்து தற்போது வரை 8 அணிகளே விளையாடி வருகின்றன.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2021) நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக ஒரு அணியை சேர்க்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2021 சீசனில் 9 அணிகள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காகவே அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் 9-வது அணியை சேர்க்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிக்காக வீரர்கள் அனைவரும் புதிதாக ஏலத்தில் விடப்படுவார்கள் என்று கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வீரர்களின் ஏலம் நடைபெறும். 9-வது அணி அகமதாபாத்தை மையமாக கொண்ட அணியாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News