செய்திகள்
வார்னர்

ஐதராபாத் அடுத்த சுற்றுக்கு தகுதி- பந்து வீச்சாளர்களுக்கு வார்னர் பாராட்டு

Published On 2020-11-04 14:35 GMT   |   Update On 2020-11-04 14:35 GMT
மும்பையை வீழ்த்தி ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றதால் பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் வார்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சார்ஜா:

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சார்ஜாவில் நேற்று இரவு நடந்த 56-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் வீழ்த்தியது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக போல்லார்ட் 41 ரன் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் சந்திப் சர்மா 3 விக்கெட்டும், ஹோல்டர், ஷபாஸ் நதீம் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். 

பின்னர் 150 ரன் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களான கேப்டன் டேவிட் வார்னர்- சகா ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.ஐதராபாத் அணி 17.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 151 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.- வார்னர் 85 ரன்னுடனும், சகா 58 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 7 வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி (ரன் ரேட் - 0.214) வெளியேற்றப்பட்டது. 

வெற்றி குறித்து ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-

பஞ்சாப் அணிக்கு எதிராக மோசமாக தோற்றதற்கு பிறகு (126 ரன் இலக்கை எடுக்க முடியாமல் தோற்றது) இந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி தற்போது மகிழ்ச்சி அளிக்கிறது. மும்பை அணியில் ஓரிரு வீரர்களுக்கு ஓய்வு அளித்திருந்தனர். ஆனால் இந்த மைதானத்தில் அவர்களை 150 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது அற்புதமானது.

அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ள அணிக்கு எதிராக நதீம் சிறப்பாக பந்து வீசினார். அவர் 4 ஓவரில் 18 ரன் மட்டுமே கொடுத்தது விதி விலக்கானது. இது அவர்களுக்கு பின்னடைவாக அமைந்தது. நாங்கள் எப்போதுமே எங்களது சிறந்தவற்றை முன்னோக்கி வைக்கிறோம். கடந்த 2016-ம் ஆண்டு நடந்ததை திரும்பிப் பார்க்கிறோம். அப்போது பட்டத்தை வெல்ல ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றிபெற வேண்டி இருந்தது. அணிக்கு சிறந்த தொடக்கம் நான் அளித்ததில் பெருமைபடுகிறேன். அது எனது கடமையும், பொறுப்புமாகும். அதிர்ஷ்டவசமாக நாங்கள் ஒரு பெரிய ஸ்கோரை துரத்தவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. 

பெங்களூர் அணி சிறந்த தாகும். அவர்களிடம் நிறைய அபாயகரமான வீரர்கள் உள்ளனர். அவர்களை 2016-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் வீழ்த்தி இருக்கிறோம். மற்றொரு வாழ்வா? சாவா? ஆட்டம் இருக்கிறது. அதில் இந்த உத்வேகத்தை கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, இந்த நாளை நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அநேகமாக இந்த சீசனில் எங்களது மோசமான செயல்பாடு இதுவாகும். நாங்கள் சில விஷயங்களை முயற்சிக்க விரும்பினோம். துரதிர்ஷ்டவசமாக அது எங்களுக்கு பலன் அளிக்கவில்லை. தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை இழப்பது பலன் அளிக்காது. பனி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் டாசை கருத்தில் கொள்ள விரும்பவில்லை. எனது காயம் குணமடைந்து நான் நன்றாக இருக்கிறேன். மீண்டும் களம் இறங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. 
Tags:    

Similar News