செய்திகள்
அஞ்சு ஜார்ஜ்

இந்திய தடகள சம்மேளனத்தின் சீனியர் துணைத்தலைவராக தேர்வாகிறார், அஞ்சு ஜார்ஜ்

Published On 2020-10-21 19:30 GMT   |   Update On 2020-10-21 19:30 GMT
இந்திய தடகள சம்மேளனத்தின் சீனியர் துணைத்தலைவராக அஞ்சு ஜார்ஜ் முதல்முறையாக போட்டியின்றி தேர்வாகிறார்கள்.
புதுடெல்லி:

இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் டெல்லியை அடுத்த குர்கயானில் வருகிற 31 மற்றும் நவம்பர் 1-ந் தேதிகளில் நடக்கிறது. இதில் 31-ந் தேதி புதிய நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. இதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் அடில் சுமரிவாலா மீண்டும் போட்டியிடுகிறார். சீனியர் துணைத் தலைவர் பதவிக்கு உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்று சாதனை படைத்த வீராங்கனையான அஞ்சு ஜார்ஜ் வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

இவர்கள் இருவரையும் எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் சுமரிவாலா 3-வது முறையாக தலைவராகவும், அஞ்சு ஜார்ஜ் முதல்முறையாக சீனியர் துணைத்தலைவராகவும் போட்டியின்றி தேர்வாகிறார்கள். பொருளாளர் பதவிக்கு மதுகந்த் பதாக் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதால் அவரும் போட்டியின்றி தேர்வாகிறார்.

சந்தீப் மேக்தா, ரவிந்தர் சவுத்ரி ஆகிய இருவரும் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். சந்தீப் மேக்தா சீனியர் இணை செயலாளர் பதவிக்கும் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் செயலாளர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகலாம் என்று தெரிகிறது. வேட்பு மனுவை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும்.
Tags:    

Similar News