செய்திகள்
ஸ்மித் - பட்லர்

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூர் அணிக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்

Published On 2020-10-17 12:00 GMT   |   Update On 2020-10-17 12:00 GMT
ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் குவித்தது.
துபாய்:
 
ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

அதன்படி, ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான ராபின் உத்தப்பா ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

ராஜஸ்தான் 5.4 ஓவரில் 50 ரன்களை எடுத்த நிலையில் தொடக்க வீரரான ஸ்டோக்ஸ் 15 ரன்னில் வெளியேறினார்.

22 பந்துகளை சந்தித்த உத்தப்பா 7 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 41 ரன்கள் குவித்து சாஹல் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த சஞ்சுவ் சாம்சங் 9 ரன்னில் வெளியேறினார். 

7.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் அணி சற்று தடுமாறியது. அடுத்துவந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

25 பந்துகளை சந்தித்த பட்லர் 24 ரன்கள் எடுத்த நிலையில் மோரிஸ் பந்து வீச்சில் வெளியேறினார். 36 பந்துகளை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித் 
1 சிக்சர் 6 பவுண்டரிகள் உள்பட 57 ரன்கள் குவித்து மோரிஸ் பந்தில் வெளியேறினார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 177 ரன்களை குவித்தது. அந்த அணியின் ராகுல் தெவாட்டியா 11 பந்துகளை சந்தித்து 19 ரன்னிலும், ஆர்ச்சர் 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

பெங்களூர் தரப்பில் அந்த அணியின் கிரிஸ் மோரிஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Tags:    

Similar News